அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்


அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்
x
தினத்தந்தி 9 Oct 2020 5:15 PM IST (Updated: 9 Oct 2020 5:15 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை,

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து மேலுமுறையீடு செய்ய அனுமதி கோரி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தனி நீதிபதி உத்தரவிட்டு 500 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல்வேறு உத்தரவுகள் இதே போன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகள் மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும், இது அரசின் துறை சார்ந்த அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story