குடிநீர் இணைப்பு டெண்டரை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஊராட்சி தலைவர்கள் மேல்முறையீடு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
மத்திய அரசின் குடிநீர் இணைப்பு திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்யக்கோரிய மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து கிராம ஊராட்சி தலைவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு நவம்பர் மாதம் தள்ளிவைத்துள்ளது
சென்னை, .
மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் எனும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு என்ற திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
அதன்படி, 2019-2020-ம் ஆண்டுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியாக ஒதுக்கி உள்ளது. இந்த நிதியின் மூலம் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
‘இந்த திட்டத்தை அமல்படுத்துவது, நிர்வகிப்பது, கண்காணிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட எந்த ஒரு முடிவையும் ஊராட்சி மன்றங்களுக்கு வழங்காமல் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இந்த திட்டப்பணிகளுக்கு தன்னிச்சையாக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். கிராம ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று திருவண்ணாமலை, கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 7 கிராம ஊராட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதேபோன்று, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் 2 பேர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 45 குடிநீர் இணைப்புகள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்துக்கு, மத்திய அரசு 914.44 கோடியை விடுவித்துள்ளது. இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ளும் விவகாரத்தில் ஊராட்சிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ள தவறி விட்டார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ ன்றார்.
தமிழக அரசுக்காக கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜரானார். விசாரணைக்கு பின்னர், அனைத்து மனுக்களையும் நவம்பர் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story