சென்னையில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 751 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6½ லட்சத்தை தாண்டியது


சென்னையில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 751 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6½ லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 Oct 2020 5:05 AM IST (Updated: 11 Oct 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6½ லட்சத்தை தாண்டியது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 751 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 89 ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 88 ஆண்கள், 1,929 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 97 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 588 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,272 பேரும், கோவையில் 392 பேரும், சேலத்தில் 339 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 18 பேரும், பெரம்பலூரில் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 79 லட்சத்து 96 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 762 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 83 ஆயிரத்து 841 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 67 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவையில் 4 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா 3 பேரும், கடலூர், கன்னியாகுமரி, கரூர், திருவண்ணாமலையில் தலா இருவரும், காஞ்சீபுரம், மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவள்ளூர், நெல்லை, திருச்சி, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 24 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 187 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 222 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 212 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 150 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 66 அரசு நிறுவனங்கள், 125 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 191 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story