ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் - முதல்வர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கி. வீரமணி வலியுறுத்தல்


ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம் - முதல்வர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கி. வீரமணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Oct 2020 1:56 PM IST (Updated: 11 Oct 2020 1:56 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து அவமதிப்பு விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர்  கி. வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகச் சகோதரி ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சித் தலைவரான பிறகும்கூட, கூட்டம் நடைபெறும்போது அவரைத் தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியுள்ளது நம் நாடு இன்னமும் சமூக விடுதலை - சமத்துவம் பெறாத நிலையிலுள்ளது என்பதைத்தானே காட்டுகிறது.
'தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது குற்றம்' என்று அரசியலமைப்புச் சட்டம் 17ஆவது விதி கூறுவதும், அதன்மீது பிரமாணம் எடுப்பதும், எல்லாம் வெறும் சடங்கு சம்பிரதாயங்கள்தானா?

சட்டம் பல்லில்லாத சாதி வெறி ஆணவத்துக்குப் பணிந்துபோகும் அருவருக்கத்தக்க நிலை 21-ம் நூற்றாண்டிலும் ஏன் தொடருவது; அந்தச் சகோதரி அமர்ந்தால் 'நாற்காலி' தீட்டுப்பட்டுப் போகுமா? அதுபோல கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், ஓர் ஊராட்சி மன்றத்தில் கொடியேற்ற ஊராட்சி மன்றத் தலைவராகிய தாழ்த்தப்பட்ட சகோதரி ஒருவர் அனுமதிக்கப்படாதது செய்தியான பிறகுதானே நடவடிக்கை எடுக்கப்பட்டது? சமூக நீதி மண்ணிலா இந்தக் கொடுமை?

கோவை மாவட்டத்திலும் இந்நிலை உள்ளது. சில ஊராட்சிகளில், இந்த ஆட்சியில் அதுவும் 'அம்மா ஆட்சி' என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அம்மாக்கள் SC, ST, என்று அவர்களை இப்படி அவமானப்படுத்துவது அவர்களுக்கு அவமானம் அல்ல; இந்த ஆட்சிக்குத்தான் அவமானம்.

இதுவே தொடர் கதையாகக் கூடும். உடனடியாக தமிழ்நாடு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி சட்ட ரீதியில் நடவடிக்கை எடுத்து, சமத்துவம், சகோதரத்துவம் நிரந்தரமாகவும், போதிய சட்டப் பாதுகாப்புள்ள நடைமுறைகள் நிலவவும் உறுதி அளிக்க வேண்டும்'.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Next Story