முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம்: அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சேலம்,
உடல்நல குறைவால் மரணம் அடைந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கே.தவுசாயம்மாள் (வயது 93). வயது முதிர்வு காரணமாக எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டுவடம் பாதிப்பால் உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சேலம் 4 ரோடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தவுசாயம்மாள் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் வீட்டிற்கு எடுத்து சென்று அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இதனிடையே, தாயாரின் மறைவு குறித்து தகவல் அறிந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து கார் மூலம் உடனடியாக சேலத்திற்கு புறப்பட்டார். பின்னர் அவர் நேற்று அதிகாலை சிலுவம்பாளையத்திற்கு வந்தார். இதையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தாயாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அவர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, முதல்-அமைச்சருக்கு அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சரோஜா, கருப்பணன், விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி., கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், கூடுதல் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ், கோவை ஐ.ஜி.பெரியய்யா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் நேரில் வந்து முதல்-அமைச்சரின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் காரணமாக யார்? யார்? எப்படி வருவார்கள் என்று தெரியாது. எனவே, இறுதிச்சடங்கு உடனடியாக நடத்தப்படுகிறது என கூறி கண் கலங்கினார். பின்னர் காலை 8.30 மணி அளவில் முதல்-அமைச்சரின் தாயார் தவுசாயம்மாளின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்னர் தவுசாயம்மாளின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பிறகு வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி கரையோரம் உள்ள மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்றார். அவருடன் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலரும் சென்றனர். பின்னர் அங்கு இறுதிச்சடங்கு செய்து சரியாக 9.30 மணி அளவில் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதாவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ் இறுதிச்சடங்குகளை செய்து தவுசாயம்மாளின் உடலுக்கு தீ மூட்டினார்.
முன்னதாக முதல்-அமைச்சரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், செம்மலை, மனோன்மணி, வெற்றிவேல், சக்திவேல், ராஜா, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், தம்பிதுரை எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி, பென்ஜமின், பாஸ்கரன், நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், சம்பத், கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி சிலுவம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆறுதல் கூறியவர்களிடம் அழுதுகொண்டே தொலைபேசியில் பேசிய முதல்-அமைச்சர்
தனது தாயார் இறந்த தகவல் கேட்டு துக்கம் தாளாமல் எடப்பாடி பழனிசாமி கண்ணீர்விட்டார். பின்னர் தனது தாயார் உடலை பார்த்தபோது மிகவும் உருக்கமாக காணப்பட்டார். தாயார் முகத்தை உற்று பார்த்தப்படி, கண்ணீர் விட்டு அழுதார். அதைத் தொடர்ந்து தனது தாயார் உடலுக்கு, கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்கள். அப்போது ஆறுதல் கூறியவர்களிடம் கண்ணீர் விட்டபடி எடப்பாடி பழனிசாமி பேசினார். தாயார் மறைவால் எடப்பாடி பழனிசாமி சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி மீது அதிக பாசம் கொண்டவர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து, தன்னுடைய 2 மகன்கள் மற்றும் மகளை நன்கு படிக்க வைத்தார். விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். எப்போதும் குடும்ப நலனில் அக்கறை கொண்டவராக விளங்கினார். எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் செல்லாமல் தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்பதை எண்ணி வாழ்ந்து வந்தார். எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு முதன் முதலாக வந்தபோது அவருக்கு ஆதரவாகவும் இருந்தவர்.
தனது மகன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி, முதல்-அமைச்சராக இருக்கும்போதும் சரி எதைப்பற்றியும் எவரிடமும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல் எப்போதும்போல் அக்கம், பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் உறவினர்களிடமும் நன்றாக பழகி வந்தார். அவர் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பாசத்துடன் இருப்பார். குறிப்பாக தனது இளைய மகனான எடப்பாடி பழனிசாமி மீது அதிக பாசம் கொண்டவர். தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகளை நன்கு படிக்கவைத்து நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு அவர்களை படிக்க வைத்தார்.
தாயார் இறுதி ஊர்வலத்தில் ஒரு கிலோ மீட்டர் நடந்து, திரும்பிய முதல்-அமைச்சர்: பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லியும் காரில் ஏறவில்லை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் தகனம் செய்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் தவுசாயம்மாள் உடல் எடுத்து செல்லப்பட, அந்த வாகனத்தின் பின்னால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிராமத்து மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து நடந்து சென்றார்.
மயானத்தில் தாயாரின் உடல் எரியூட்டிய பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது காரில் ஏறி செல்லுமாறு கிராம மக்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கூறினார்கள். ஆனால் அவர், ‘நான் உங்களோடு நடந்தே வருகிறேன்’ என்று கூறி பொதுமக்களுடன் நடந்தபடி தனது இல்லத்துக்கு வந்தார்.
மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடைசியாக கூறியது என்ன?
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து உருக்கமாக பேசினார். அதன் விவரம் வருமாறு:-
என் மகன் எடப்பாடி பழனிசாமி சிறு வயது முதல் ஏழை- எளிய மக்களோடு பழகி பொதுமக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான். கோனேரிப்பட்டி அரசு பள்ளியில் படித்த என் மகன், அப்போது நாங்கள் குடியிருந்த விவசாய தோட்டத்திற்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும், தினசரி நடந்து போய் படித்து வந்தான். பள்ளி படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான். தினசரி காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவர் என் மகன். ஏழை-எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Related Tags :
Next Story