ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததே தி.மு.க.வை சேர்ந்தவர் தான் - மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பா.பென்ஜமின் பதில்


ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததே தி.மு.க.வை சேர்ந்தவர் தான் - மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் பா.பென்ஜமின் பதில்
x
தினத்தந்தி 14 Oct 2020 3:15 AM IST (Updated: 14 Oct 2020 2:23 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு திட்டை பட்டியலின ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்ததே துணைத்தலைவரான தி.மு.க.வை சேர்ந்தவர் தான் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பா.பென்ஜமின் பதிலளித்துள்ளார்.

சென்னை, 

ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தி.மு.க.வில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.

மேற்படி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத்தலைவரான தி.மு.க.வை சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமை கொடுமைக்கு காரணமான தி.மு.க. பின்னணியை மறைத்ததோடு, சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டவரை காப்பாற்றுவதற்கும் பெரும் முயற்சி செய்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தின் இழி செயல் என்று அறிக்கை வெளியிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த தி.மு.க. தலைவர் முயற்சித்திருப்பது பித்தலாட்டத்தின் உச்சமாகும். சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமை செயலுக்கு யார் காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளாமலே அ.தி.மு.க. ஆட்சி மீது பழி போட முயற்சித்திருப்பது அவரது அறியாமையையும், அரசியல் நமைச்சலையுமே காட்டுகிறது.

அ.தி.மு.க. என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும். இந்த இயக்கம் பெரியார் விளைந்த ஈரோட்டு சீமையில் செங்குந்த முதலியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் நிறைந்த பகுதியில் மிகமிக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை அமைச்சராக்கி சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கமாகும். அது மட்டுமல்ல, நீர்த்தலமான திருவானைக்காவலும், பூலோக சொர்க்கமான ஸ்ரீரங்கமும் இடம் பெற்ற திருச்சி நாடாளுமன்ற பொதுத்தொகுதியில் தன் பெயரிலேயே தலித் என்கிற அடைமொழியை சுமந்திருந்த மறைந்த தலித் எழில்மலையை போட்டியிட வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கி சமதர்மத்தை இந்த நாட்டுக்கே முன்மொழிந்த இயக்கமும் அ.தி.மு.க. தான்.

எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதா தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிசாமி வரை பட்டியலினத்து மக்களை பரிவோடும் பாசத்தோடும் முன் கொண்டு செல்வதிலும், அவர்களுக்கான சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட உரிமைகளை நிறைவாக வழங்கி தாழ்த்தப்பட்ட சமூகம் தன் நிலையில் உயர்ந்திட எந்நாளும் உழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வெள்ளந்தி மக்களும் உளமாற அறிவர்.

கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சியில் நடைபெற்றது போன்றதொரு கசப்பான சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாது இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறிழைத்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

முறையாக ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடத்துதல், கண்காணித்தல், தவறு இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு போதும் தீண்டாமை என்கிற இழி செயல் நிகழ அனுமதித்தது கிடையாது. அநாகரிகத்தின் உச்சமாகவும், சாதிய துவேசங்களின் மையமாகவும் தி.மு.க. தான் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story