வேளாண்மைத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி


வேளாண்மைத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 14 Oct 2020 2:58 AM IST (Updated: 14 Oct 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மைத்துறை அமைச்சருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விழுப்புரம், 

முதல்-அமைச்சர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் விழுப்புரம் அருகே வேளாண்மைத்துறை அமைச்சருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு (வயது 72) நேற்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் புறப்பட்டார்.

விழுப்புரத்தை கடந்து காலை 10.45 மணியளவில் அமைச்சர் துரைக்கண்ணு செல்லும்போது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு நாடித்துடிப்பு குறைந்தது. உடனே அமைச்சருடன் காரில் சென்றவர்கள் மற்றும் வழிக்காவலுக்கு சென்ற போலீசார், அமைச்சர் துரைக்கண்ணுவை அருகில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவிதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, நேற்று மாலை அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினை என்பதால் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story