அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 4:01 AM IST (Updated: 14 Oct 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

சென்னை, 

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) 49-வது ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் அன்றையதினம் காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

பின்னர் அவர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி. மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்டம், கிளை அளவிலான அனைத்து பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளை செய்து, கட்சியின் 49-வது ஆண்டு தொடக்க நாளான 17-ந் தேதி அன்று ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச்சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க. கொடி கம்பங்களுக்கு புதுவண்ணம் தீட்டி அதனை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், அ.தி.மு.க.வின் தொடக்கநாளை சிறப்பாக கொண்டாடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story