அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம்
ஆண்டுக்கு ரூ.314 கோடி நிதியை எப்படி திரட்டுவீர்கள்? என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருக்கிறது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்துக்கான ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருந்ததாக பேசப்படுகிறது.
தற்போது வரை அந்த கடிதம் ஒரு விவாத பொருளாகவே இருந்து வருகிறது. அதில் அவர், ஆண்டுக்கு ரூ.314 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,570 கோடி நிதியை அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ஆதாரங்களால் திரட்ட முடியும்? என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஆண்டுக்கு ரூ.314 கோடி நிதியை எப்படி திரட்டுவீர்கள்? என்று தமிழக அரசு தரப்பில் இருந்து துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்டு தற்போது கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில், ‘பல்கலைக்கழகத்தின் உள்ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.314 கோடி நிதி திரட்ட முடியும் என்று சொல்லி இருக்கிறீர்கள். எத்தகைய ஆதாரங்கள் மூலம் நீங்கள் அந்த நிதியை திரட்டுவீர்கள் என்ற விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீதம் இடஒதுக்கீடு முறை தொடருமா? நுழைவுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்து தெளிவாக மத்திய அரசு எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதுவரை பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பது சாத்தியம் இல்லை. தற்போதைய நிலையிலேயே பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு அனைத்து உதவிகளை செய்யும்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story