‘முககவசம்தான் கொரோனா தடுப்பு மருந்து’ - தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் ‘தினத்தந்தி’ தலையங்கம்


‘முககவசம்தான் கொரோனா தடுப்பு மருந்து’ - தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் ‘தினத்தந்தி’ தலையங்கம்
x
தினத்தந்தி 14 Oct 2020 10:13 PM GMT (Updated: 14 Oct 2020 10:13 PM GMT)

முககவசம் தான் கொரோனா தடுப்பு மருந்து என்ற ‘தினத்தந்தி’யின் தலையங்கம் டிஜிட்டல் போர்டாக தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் பக்தர்களுக்காக 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில், மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பொது மக்களில் பலர் முககவசங்களை அணியாமல் சுற்றி வருவதால் நோய் பரவல் அதிகமாகி வருகிறது. முககவசத்தின் அவசியத்தை உணர்த்தி ‘முககவசம் தான் கொரோனா தடுப்பு மருந்து’ என்ற தலைப்பில் கடந்த 13-ந்தேதி தினத்தந்தியில் தலையங்கம் வெளியிடப்பட்டு இருந்தது. இது பல்வேறு தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

‘தினத்தந்தி’யில் வந்த முககவசம் குறித்த விழிப்புணர்வு தலையங்கத்தை டிஜிட்டல் போர்டாக பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். மலையே தோரணம் போன்று அமைந்துள்ளதால் இந்த இடம் தோரணமலை என்று வழங்கப்பட்டு வருகிறது. தோரணமலை உச்சியில் 964 படிகட்டுகளுக்கு மேல் குகைக்குள் முருகப்பெருமான் வீற்றியிருக்கிறார். மலையை சுற்றிலும் நோய் தீர்க்கும் 64 சுணைகள் உள்ளன. சுணையில் உள்ள தண்ணீரை கொண்டே முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் நடக்கும்.

அகத்தியர் தமிழ் வளர்த்த மலை. தேரையர் சித்தம் மருத்துவம் அருளிய இடம். இத்தகை சிறப்புகளை உடைய தோரணமலைக்கு, கொரோனா தாக்கம் காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வர கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் பக்தர்களில் சிலர் முககவசம் அணியாமல் கோவிலுக்குள் வழக்கமாகி கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் தான், ‘தினத்தந்தி’யில் வந்த முககவசம் குறித்த விழிப்புணர்வு தலையங்கத்தை டிஜிட்டல் போர்டாக பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் தோரணமலை முருகன் கோவில் அடிவாரத்தில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் வைத்துள்ளார்.

இது குறித்து பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் கூறும்போது, ‘கோவிலுக்கு பலர் முககவசம் அணியாமல் வருவதை பார்த்ததும் சங்கடமாக இருந்தது. இதற்காக ரூ.10-க்கு வாங்கப்பட்ட முககவசங்களை ரூ.5-க்கு பக்தர்களுக்கு வழங்கினோம். ஆனாலும் அவர்கள் முறையாக அணியவில்லை. இந்த நேரத்தில் தான், ’தினத்தந்தி’ தலையங்கம் எங்களுக்கு கைகொடுத்துள்ளது. ‘முககவசம் தான் கொரோனா தடுப்பு மருந்து’ என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தை டிஜிட்டல் நகல் எடுத்து தோரணமலை அடிவாரத்தில் 2 இடங்களில் வைத்துள்ளோம். மலையேறும் இடத்தில் இந்த தலையங்கத்தை படித்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிக்கிறோம். எளியவர்களை தமிழ் படிக்க வைத்த தந்தி, முககவசங்களை அணிய வைக்கவும் பாடுபடுவதற்காக ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவிக்கிறோம்’ என்று தெரிவித்தார்.


Next Story