அதிகாரிகளுக்கு கார் வாங்க கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி


அதிகாரிகளுக்கு கார் வாங்க கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 15 Oct 2020 11:08 AM IST (Updated: 15 Oct 2020 11:54 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளுக்கு கார் வாங்க கோயில் நிதியை பயன்படுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கிராம கோயில்களை சீரமைக்க பெரிய கோயில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி நிதி ஒதுக்கி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கார் வாங்க, அறநிலையத்துறை அலுவலகம் கட்ட கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது என்றும் 29,000க்கு மேற்பட்ட கோயிகளில் அறங்காவலர்கள் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் உபரிநிதி ஒதுக்குவதற்கான கோயில்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் 3 மாதங்களில் பல கோயில் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என இந்து சமய அரநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அதிகாரிகளுக்கு கார் வாங்க அரசு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது? கோயில் நிதி ஏன் பயன்படுத்தப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினர். மேலும், “சிவன் சொத்து குலநாசம் என்று ஒரு பழமொழி உண்டு” என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

சட்டங்கள், விதிமுறைகள் இருந்தாலும் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் சொத்துக்கள் கணக்கிடப்பட்டுள்ளதா? அந்த நிலங்கள் யார் பெயரில் உள்ளன? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கிற்கான பதில் மனுக்களில் திருப்தி இல்லையென்றால் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஓவ்வொரு விசாரணையின் போது ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதனையடுத்து உபரிநிதி பயன்படுத்த கூடாது என்ற இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story