அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 Oct 2020 9:42 PM GMT (Updated: 15 Oct 2020 9:42 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி- மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அந்த சிறப்பு அந்தஸ்தை எப்படியாது பெற்றே தீருவது என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் அருகில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் எழிலரசன், இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் உள்பட இளைஞரணி-மாணவரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சூரப்பாவை ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று தி.மு.க. வினர் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோதே, தமிழகத்தில் எத்தனையோ அறிஞர்கள் இருக்கும்போது கர்நாடகாவில் இருந்து ஒருவரை நியமிப்பது ஏன்? என மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். மு.க.ஸ்டாலின் எதிர்ப்புக்குரல் சரிதான் என்பது போலவே நிலைமை இருக்கிறது. சூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தை காட்டிக்கொண்டு வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற ரூ.3 ஆயிரம் கோடி நிதி தேவை என்ற நிலையில் மாநில அரசு முடியாது என்று மறுத்துவிட்ட நிலையிலும், எப்படியாவது திரட்டி தருகிறோம் என்று சூரப்பா சொல்வதை என்னவென்று சொல்வது? சிறப்பு அந்தஸ்து சாத்தியமாகிவிட்டால் 4 வருடத்துக்கு ரூ.2 லட்சம் செலவழித்து படிக்கும் மாணவன் இனி வருடத்துக்கு தலா ரூ.2 லட்சம் செலவழிக்க நேரிடும். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் இனி நாம் நுழையவே முடியாமல் போய்விடும்.

தமிழகத்தில் ஏழைகளின் மருத்துவக்கல்வியை முடக்க எப்படி ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டதோ, அதேபோல இங்கிருந்து நிறைய பேர் என்ஜினீயரிங் படித்து வெளிநாடு செல்வதை தடுக்கவே இத்திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

சூரப்பா தன்னிச்சையான மனப்பான்மையுடன் செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனாலும் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல அமைச்சர்களும் பேட்டி தருகிறார்கள். அண்ணா பெயரில் இயங்கும் தங்களது கட்சியை பா.ஜ.க.வுக்கு அடகுவைத்தது போல, இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தையும் அ.தி.மு.க.வினர் அடகுவைக்க நினைக்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. மக்களின் பேராதரவுடன் முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர இருக்கிறார். அப்போது விட்டுக்கொடுக்கப்பட்ட அத்தனை உரிமைகளும் நிச்சயம் மீட்டெடுக்கப்படும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story