அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத் குமார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 16 Oct 2020 1:36 PM IST (Updated: 16 Oct 2020 1:36 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை,

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியின் வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. மிலானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனக்கெதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், கற்பனையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அ.தி.மு.க.,வை களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க.வை சார்ந்து இயங்கி வரும் மனுதாரர் மிலானி, வேண்டுமென்றே அந்த தகவலை மறைத்து தேனி தொகுதி வாக்காளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ரவீந்திரநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கூற முடியாது என தெரிவித்தார். மேலும், அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் ரவீந்திரநாத்தின் கோரிக்கையை ஏற்று அவருக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க முடியாது என கூறி அவருடைய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story