4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (இன்று) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வருகிற 19-ந்தேதி (நாளைமறுதினம்) மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதனால் 18-ந்தேதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 19-ந்தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 20-ந்தேதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேற்று பிற்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி சின்னக்கல்லார், பாபநாசம் மற்றும் வால்பாறையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சித்தாறு, தென்காசி, சோலையாரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story