குலசை தசரா விழாவின் இரண்டாம் நாள் - நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


குலசை தசரா விழாவின் இரண்டாம் நாள் - நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Oct 2020 5:08 AM GMT (Updated: 18 Oct 2020 5:08 AM GMT)

குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி,

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் திருச்செந்தூருக்கு அருகே உள்ள குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள், 108 நாட்கள் என விரதம் இருந்து, காளியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து, நேர்த்திக் கடன் செலுத்த ஊர் ஊராக சென்று தர்மம் பெற்று அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்க்ள்.

இந்த திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவது உண்டு. தற்போது கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி மிக எளிமையான முறையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது.

அதன்படி குலசேகரப்பட்டினத்தில் நேற்றைய தினம் பக்தரகள் வருகையின்றி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை 6 மணியளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் மாலை அணிந்து விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை காப்பு கயிறு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்து ரசீது பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே காப்பு கயிறினை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்த பக்தர்கள் காப்பு கயிறினை பெற்றுக் கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குலசை தசரா திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்பாள் ஒவ்வொரு கோலத்தில் சிம்மம், ரிஷபம் என ஒவ்வொரு வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர இருக்கிறார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் வரும் 26ஆம் தேதி கோவில் வளாகத்தில் வைத்து பக்தர்கள் இன்றி நடத்தப்பட இருக்கிறது. குலசை தசரா திருவிழாவின் இத்தகையை முக்கிய நிகழ்வுகளை இணையதளம் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்து நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவிற்கு 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story