நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது


நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை - ஆதார் ஆணையம் கைவிரித்தது
x
தினத்தந்தி 18 Oct 2020 7:57 PM GMT (Updated: 18 Oct 2020 7:57 PM GMT)

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

சென்னை, 

இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர் பட்டியலை புகைப்படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டனர். இவர்கள் பற்றிய உண்மையான விவரங்களை கண்டு பிடித்து கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்துக்கு 10 குற்றவாளிகளின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர். புகைப்படத்தை வைத்து 10 குற்றவாளிகளின் விவரங்களை ஆதார் ஆணையம் ஆய்வு செய்தது.

தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு ஆதார் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், புகைப்படங்களை அடிப்படையாக வைத்து 10 முக்கிய குற்றவாளிகளின் உண்மையான விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்து விட்டதாக, சி.பி. சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

இதனால் முக்கியமான 10 குற்றவாளிகளை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story