மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது - பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு


மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது - பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 3:13 AM IST (Updated: 20 Oct 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதால், பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. நேற்று காலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் பிற்பகல் வெயில் வறுத்தெடுத்தது.

வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதனால் 20-ந் தேதி (இன்று) வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 21, 22-ந் தேதிகளில் தெற்கு மராட்டியம், கோவா, கர்நாடக கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 23-ந் தேதி தெற்கு மராட்டியம், கோவா, கர்நாடக கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம்.

நேற்று பிற்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மலையூரில் 6 செ.மீ., திருமயத்தில் 5 செ.மீ., குடுமியான்மலை, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தலா 4 செ.மீ., துறையூர், மானாமதுரை, திருப்பத்தூர், பொன்னேரி, திருப்புவனத்தில் தலா 3 செ.மீ., சென்னை டி.ஜி.பி. அலுவலகம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், ராசிபுரம், மேட்டூர், கோபிசெட்டிபாளையம், மணப்பாறை, பெரம்பூர், புழல், அம்பத்தூர், ஊத்துக்கோட்டையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story