ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற நீட் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்


ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற நீட் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Oct 2020 2:39 PM IST (Updated: 22 Oct 2020 3:54 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், தேர்ச்சி அடைந்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது. இதனையடுத்து "நீட்” தேர்வு முறையை நியாயப்படுத்தும் போலியான நோக்கில், ‘தமிழகம் சாதிக்கிறது’  எனப் பூரிப்படைந்தோர் தெளிவு பெறவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் 'நீட்' தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணத்தை  ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியான கட்டுரை இன்று தகர்த்துள்ளது.

மொத்தம் 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என தேசியத் தேர்வு முகமை நிர்ணயித்துள்ளது. ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற கருத்து மாணவ - மாணவியரிடையேயும், பெற்றோரிடையேயும் பரப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் அது உண்மையல்ல. அதன் மூலம் மருத்துவ் படிப்பில் சேர விண்ணப்பம் போட மட்டுமே அந்த மாணவர் தகுதி பெற்றவர் ஆகிறார். இந்த ஆண்டு நீட் 'கட்-ஆஃப்' மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர அனுமதி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 'நீட்' தேர்வு முறையை நியாயப் படுத்தும் போலியான நோக்கில் 'தமிழகம் சாதிக்கிறது' எனப் பூரிப்படைந்தோர், புளகாங்கிதம் கொண்டோர், பரப்புரை செய்யலாம் என்ற கற்பனையில் மிதந்தோர், இந்தக் கசப்பான உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால், மத்திய பாஜக அரசு பிடிவாதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்திவரும் 'நீட்', ரத்து செய்யப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story