கவர்னரின் அத்துமீறலை தடுக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் - ரா.முத்தரசன் வலியுறுத்தல்
கவர்னரின் அத்துமீறலை தடுக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று ரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசு இளநிலை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்காக இடஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சட்ட மசோதாவை, கடந்த மாதம் 15-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. மாநில சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்கவேண்டிய கவர்னர், மக்கள் பிரதிநிதித்துவ நெறிமுறைகளை நிராகரித்து, அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
மேலும் “முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால், மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படும்” என்று தெரிவித்திருப்பது மாநில அரசுக்கு நிபந்தனை போட்டு, நிர்ப்பந்திக்கும் செயலாகும். இது கூட்டாட்சி கோட்பாடுகள் மீது கவர்னர் மூலம் மத்திய அரசு நடத்தியுள்ள நேரடித் தாக்குதலாகும். கவர்னர் மாளிகையின் சதியாலோசனைகளை மக்கள் மன்றத்தில் முன்வைப்பதும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி ஒன்றுபட்ட அழுத்தம் தந்து, கவர்னரின் அத்துமீறலை தடுப்பதும் மாநில அரசின் அரசியலமைப்பு சார்ந்த கடமை பொறுப்பாகும். கவர்னரின் அத்துமீறலை தடுக்க உடனடியாக மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story