தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
“விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 104 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 ஆயிரத்து 482 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய வளாகத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகங்கள், திட்ட இயக்குனர் அலுவலகம், குழந்தைகள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பதிவாளர் அலுவலகம், மாவட்ட நூலகம், பட்டு வளர்ச்சித்துறை,
கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கருவூல அலுவலகம், கடவுசீட்டு அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வேண்பாக்கத்தில் 119 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 27 ஆயிரத்து 62 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய வளாகத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கருவூல அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், ஆதார்- இசேவை மையம், எல்காட் அலுவலகம், கடவுசீட்டு அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் போன்ற துறைகளின் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
Related Tags :
Next Story