மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை


மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு  அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 26 Oct 2020 5:06 AM GMT (Updated: 26 Oct 2020 5:17 AM GMT)

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சதயவிழா நடைபெறுமா? என கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் சதயவிழாவை ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதய விழாவில் கொரோனா தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் அறிவுறுத்தி இருந்தார். இந்த சூழலில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று  நடைபெற்றது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி அவரது சிலைக்கு  கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

சதய விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பக்தர்களில் பத்து வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிவதோடு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா மற்றும் அரசு சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 42 திவ்ய அபிஷேகங்களும், சுவாமி வீதிஉலா பெரிய கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது.

இன்று ராஜராஜசோழன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதால் தஞ்சை பெரிய கோவில் மற்றும் சிலை இருக்கக்கூடிய பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு தேவாரம் திருவாசகம் பாடி நிகழ்வுகள் தொடங்கப்பட்டது

Next Story