குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: பக்தர்களின்றி எளிமையாக நடந்தது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்: பக்தர்களின்றி எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 27 Oct 2020 4:48 AM IST (Updated: 27 Oct 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் முன்பு சென்றடைந்தார். பின்னர் மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது.

11-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் அம்மன் கோவிலை சுற்றி பவனி வருகிறார். மாலையில் அம்மன் கோவிலை வந்தடைந்ததும், கொடியிறக்கப்பட்டவுடன் அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் காப்புகளை அவிழ்த்து, வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

விழாவின் நிறைவு நாளான நாளை (புதன்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story