7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்


7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்
x
தினத்தந்தி 28 Oct 2020 3:32 AM IST (Updated: 28 Oct 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக, மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்

சென்னை, 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக கவர்னருக்கு வழிகாட்ட வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்தில், “கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறுவதற்கும், பெருமைமிக்க இந்த நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற்கான கனவை நனவாவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி வருவதை, தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.

மறுபுறம் 2017, 2018 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசு பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுனர்கள் அடங்கிய கமிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அந்த கமிட்டியின் பரிந்துரைகளை தொடர்ந்து ‘மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான தகுதிதேர்வாக கருதப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (நீட்) வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது’ என்று மாநில அரசு முடிவெடுத்தது.

அந்த முடிவின் அடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ‘மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளங்கலை படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020”, 15.9.2020 அன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

16.10.2020 அன்று நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இடஒதுக்கீட்டின் பலனை அடையும்படியாக மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு 21.10.2020 அன்று கடிதம் எழுதினார்.

ஆனால், வியப்பளிக்கும் வகையில் கவர்னர் எழுதிய 22.10.2020 தேதியிட்ட கடிதத்தில், ஏற்கனவே 40 நாட்கள் அந்த முக்கியமான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத அவர், அதுகுறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக இருப்பதால் தி.மு.க அமைதியாகவும் ஜனநாயகவழியிலும் அக்டோபர் 24, 2020 அன்று கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியது. அப்போது மு.க.ஸ்டாலின் மேலும் காலதாமதமின்றி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கவர்னரை வலியுறுத்தினார். ஏற்கனவே நீட் தேர்வு உண்டாக்கியிருக்கும் காயத்தோடு, தற்போது மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவ கல்வியை கற்க விரும்பும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதோடு, இந்த கல்வியாண்டை பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.

மேற்சொன்ன காரணத்தினாலும், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும், மருத்துவத்துறையை தங்கள் தொழிலாக அமைத்துக்கொள்ளும் அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும்படியாக மருத்துவ படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020’க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு கவர்னருக்கு மத்திய உள்துறை மந்திரி வழிகாட்ட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story