முல்லைப்பெரியாறு தடுப்பணையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பயிற்சி
முல்லைப்பெரியாறு தடுப்பணையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
உப்புக்கோட்டை,
இந்திய பாதுகாப்பில், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படைப்பிரிவை சேர்ந்த 90 வீரர்கள் நேற்று தேனி அருகே உள்ள வீரபாண்டி வந்தனர். பின்னர் அங்குள்ள முல்லைப் பெரியாறு தடுப்பணையில், இயற்கை பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து அவர்கள் பயிற்சி எடுத்தனர். இந்த பயிற்சிக்கு, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டோ சஞ்சித்சிங் தலைமை தாங்கினார்.
பயிற்சியின்போது கயிறு கட்டி முல்லைப்பெரியாற்றை படைவீரர்கள் கடந்தனர். மேலும் வாழைமரம், லைப் ஜாக்கெட், லாரி டியூப், காலிபாட்டில்கள், காலிகுடம், காலி கியாஸ் சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து போன்றவற்றை பயன்படுத்தி ஆற்றை கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், முதலுதவி பெட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் 10 தீயணைப்பு படை வீரர்களும், வீரபாண்டி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லை பாதுகாப்பு படையினரின் இந்த பயிற்சியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story