காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணி: ராகுல் காந்தி பங்கேற்பு - கே.எஸ்.அழகிரி தகவல்


காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணி: ராகுல் காந்தி பங்கேற்பு - கே.எஸ்.அழகிரி தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2020 1:29 PM IST (Updated: 2 Nov 2020 1:29 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர் கலப்பை பேரணியின் இறுதியில், ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ஏர் கலப்பை பொருத்தி நடக்கும் பேரணியின் இறுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வருகிற மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிரிதி குறித்து சொல்லப்படாத கருத்துக்களை சொல்லியதாக திரித்து, ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மத்திய பா.ஜ.க. அரசால் தமிழக மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் நியாயம் கிடைப்பதற்காக நீதிமன்றத்தில் போராட வேண்டிய நிலை இருக்கிறது.

விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படுவதில்லை. கொரோனா தொற்றினால் பொது ஊடரங்கு அமலில் உள்ள காலத்தில் கூட விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு அபராத வட்டி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க. கவலைப்படாமல் வேல் யாத்திரை நடத்துவதன் மூலம் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

கடந்த காலங்களில் மகாத்மா காந்தியடிகளின் கையில் ராமர் இருந்தவரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அத்வானி கைக்கு இராம பிரான் மாறிய பிறகு நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டது. அதேபோல, கிருபானந்த வாரியார் பிரச்சாரத்தில் முருக வழிபாட்டின் மூலம் தமிழகத்தில் பக்தர்கள் பெருகி மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சமீபத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். வேளாண் சட்டத்தினால் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஆதரவு விலை பறிக்கப்பட்டுள்ளது. இனி விவசாயிகளின் விளைப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

விவசாயிகள் விளை பொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பதன் மூலமாக நியாயமான விலை கிடைத்து வந்தது. அந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் விவசாயிகளின் சந்தை மாற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அப்பட்டமாக பறிக்கிற செயலாகும். இதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயிகளை திரட்டி பலமுனைகளில் போராடி வருகிறது.

மத்திய வேளாண் சட்டங்களினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை மக்களிடையே பரப்புரை செய்வதற்காக 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலம் காங்கிரஸ் கட்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஊர்வலத்தின் மூலமாக வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுப்பு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிற வகையில் பரப்புரை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பா.ஜ.க.வின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களின் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட திட்டமிட்டிருக்கிறது.

தமிழகத்தில் 150 இடங்களில் இருந்து விவசாய டிராக்டர்களில் ஏர் கலப்பை பொறுத்தப்பட்ட ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஆகியோர் பங்கேற்கிற வகையில் பரப்புரை பயணத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் திட்டமிட்டு நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் நடைபெறும்  ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் டிராக்டர் ஊர்வலத்தின் மூலமாக விவசாயிகளின் எதிர்ப்புணர்ச்சியை தலைவர் ராகுல்காந்தி வெளிப்படுத்தியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல, தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்று அதில் தெரிவித்துள்ளார். 

Next Story