அரசியலுக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம்: ரஜினிகாந்த் இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும், வரமாட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடக்கின்றன.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகிய கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் “அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் உண்மையா? இல்லையா? என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில், அதற்கு ரஜினிகாந்தே தனது டுவிட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த கடிதத்தில் கூறப்பட்ட மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்றும் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு குவிந்து, அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகுந்த நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது தான் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையியே அவர் அரசியலுக்கு வருவார் என்றும், வரமாட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், பல பகுதியிலிருந்து ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story