வயநாடு அருகே மாவோயிஸ்டு சுட்டுக்கொலை: தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை


வயநாடு அருகே மாவோயிஸ்டு சுட்டுக்கொலை: தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 4 Nov 2020 3:20 PM IST (Updated: 4 Nov 2020 3:20 PM IST)
t-max-icont-min-icon

வயநாடு அருகே மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு,

மீன்முட்டி வனப்பகுதியில் தண்டர்போல்டு போலீசார் நேற்று காலை 9 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மீதமுள்ள 5 பேரும் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கூடலூர், பந்தலூர் தாலுகா வனத்துக்குள் நுழையாமல் தடுக்க கூடலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கூடலூர் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்பட 11 சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று நியூகோப், தேவாலா, நெலாக்கோட்டை, தேவர்சோலை, சேரம்பாடி, மசினகுடி என அனைத்து போலீஸ் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும் எல்லையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குண்டு காயங்களுடன் யாராவது அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுபோன்று எல்லையில் இருக்கும் வனக்கிராமங்களில் குண்டு காயங்களுடன் யாராவது வந்தார்களா என்பது குறித்தும் வனத்துறையினருடன் இணைந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் சந்தேகத்துக்கு இடமாக யாராவது நடமாடுகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story