பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் - தமிழக அரசு
பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அக்டோபர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது. பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளோடு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
Related Tags :
Next Story