வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 5 Nov 2020 11:58 AM IST (Updated: 5 Nov 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்திருந்தது

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. 

Next Story