பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - கே.எஸ்.அழகிரி


பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - கே.எஸ்.அழகிரி
x
தினத்தந்தி 5 Nov 2020 1:56 PM IST (Updated: 5 Nov 2020 1:56 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட பா.ஜ.க.வின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்குகளை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிப்பதற்குத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதும், அதை எதிர்த்துத் தமிழகத்தில் எதிர்ப்புக் குரல் ஒலிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தியைத் திணிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அந்த முயற்சியிலிருந்து மத்திய பாஜக அரசு பின்வாங்கியது.

சில நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி துறையின் உதவி ஆணையர் வி.பாலமுருகனிடம் இந்தியைப் பரப்புவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்தி அறியாத அவரிடம் இந்தியைப் பரப்புகிற பொறுப்பை ஒப்படைத்தது குறித்து அவர் கண்டனத்தைப் பதிவு செய்ததைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதற்குப் பிறகு அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, பழிவாங்கும் போக்கோடு நடத்தப்படுகிற நிலை ஏற்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை 'இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?' என்று சென்னை விமான நிலையப் பணியாளர் கேள்வி கேட்கிற துணிச்சல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய துணிச்சலை வழங்கியது யார்?

அதேபோல, விவசாயிகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களைக் கேட்ட போது, அதற்கான பதில்கள் இந்தியில்தான் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியிட்ட கடிதத்தில் 2014-15 முதல் 2020-2021 வரை ஆயுர்வேதா, சித்தா, யுனானி துறைகளுக்குத் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அந்தத் துறைகளில் இருக்கும் மருத்துவ மையங்கள் எத்தனை? என்கிற விவரத்தைக் கேட்டிருந்தார்.

இந்தக் கடிதம் மத்திய சுகாதாரத்துறை மூலமாக உத்தரப் பிரதேச ஆயுஷ் அமைப்புக்கு அக்டோபர் 27 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் துறையிடமிருந்து இந்தியில் பெறப்பட்ட கடிதத்தை ஆயுஷ் அமைச்சகம் வழக்கறிஞர் எஸ்.குமாரதேவனுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அந்தக் கடிதத்தின் கவரில் கூட முகவரி இந்தியில்தான் எழுதப்பட்டுள்ளது. அதை ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு அஞ்சல் ஊழியர் வழக்கறிஞர் குமாரதேவனிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்தியில் எழுதப்பட்ட இந்தக் கடிதப் போக்குவரத்து தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தி பேசாத மக்களுக்கு 24.4.1963 இல் பிரதமர் நேரு, 'ஆங்கிலம் துணை மொழியாகவும், மாற்று மொழியாகவும், மக்கள் விரும்பும்வரை தொடர்ந்து இருக்கும். அதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இந்தி மொழி அறிந்த மக்களிடம் விடாமல், இந்தி மொழி அறியாத மக்களிடமே விடுவேன்' என்று உறுதிமொழி வழங்கினார்.

அந்த உறுதிமொழியின் அடிப்படையில் ஆட்சிமொழிகள் மசோதா 1967 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

ஆட்சி மொழிகள் திருத்தச் சட்டத்தின்படி, 'இந்தி மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலத்திற்கும், அதை ஏற்காத மாநிலத்திற்குமான செய்தித் தொடர்பில் இந்தி பயன்படுத்தப்படுமாயின், அந்தச் செய்தித் தொடர்புடன் ஆங்கில மொழிபெயர்ப்பு 'கட்டாயமாக' இணைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது'.

இந்தப் பாதுகாப்பு அம்சங்களை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட விவரங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தராமல், இந்தி மொழியில் பதில் அனுப்பியது ஆட்சி மொழி திருத்தச் சட்டத்திற்கு விரோதமானது. நேரு கொடுத்த உறுதிமொழியைப் பாஜக அரசு உதாசீனப்படுத்தி, அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய பாஜக அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது பாரதியாரின் கவிதைகளையோ, திருக்குறளையோ மேற்கோள் காட்டுகிற அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இது பாஜகவின் இரட்டை வேடத்தை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல, இந்தியாவை இணைக்கக்கூடிய மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசியதை எவரும் மறந்திட இயலாது.

பன்முகக் கலாச்சாரமும், பல மொழிகளும் கொண்ட இந்தியாவில், இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட பாஜகவின் இந்தித் திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்குகளை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்” என்று அதில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Next Story