மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இடஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
நீலகிரி,
மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு கட்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் ஒன்றரை மாதத்திற்குப் பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் பினேகாஸ் என்பவர் கோரிக்கை வைத்தார்.
முறைப்படி மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் கொரோனா குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் பழனிசாமியிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த முதலமைச்சர்,
மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இது பொருந்தாது என்று விளக்கம் அளித்தார். மேலும் அரசு உதவி பெரும் பள்ளிகளாகவே இருந்தாலும் அவை தனியார் பள்ளிகள் தான் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story