தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேல் சஸ்பெண்ட்


தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேல் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 7 Nov 2020 1:56 PM IST (Updated: 7 Nov 2020 1:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான காவலர் கற்குவேலை, சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி,

கடந்த மாதம் பாளையங்கோட்டையை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த காவலர் கற்குவேல் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை, நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் மகேஷ் குமார் தலைமையில் கைதான காவலர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்றது. 

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காவலர் கற்குவேல், நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், யாரிடமும் மாட்டாமல் தப்பிக்க காவலர் உடையினையும் காவலருக்கான அடையாள அட்டையும் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. 

கற்குவேல், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததாகவும், அதனை ஈடு செய்ய, முக்கிய பிரமுகர்களிடம் பல லட்சம் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கடனை அடைக்க முடியாமல் இது போன்ற கொள்ளைச் சம்பவத்தில் காவலர் கற்குவேல் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் காவலர் கற்குவேலை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் கற்குவேலை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story