வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு


வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 7 Nov 2020 3:01 PM IST (Updated: 7 Nov 2020 3:01 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகேயுள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் கடந்த 28-ம் தேதி திருட்டு வழக்குக்கான விசாரணை என்று செல்வமுருகனை அழைத்துச் சென்ற நெய்வேலி போலீசார், அவரைக் கைது செய்து விருத்தாச்சலம் சிறையில் அடைத்தனர்.

கடந்த 2-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறைக் காவலர்கள். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து செல்வமுருகன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கபட்டது. 

இதனனத்தொடர்ந்து போலீசார் தாக்கியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் புகார் தெரிவித்து வருகின்றனா். அவரது மனைவி பிரேமா, உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த பண்ருட்டி வட்டாட்சியா் ஆா்.பிரகாஷ், டிஎஸ்பி பாபு பிரசாத், காடாம்புலியூா் காவல் ஆய்வாளா் மலா்விழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினா். அப்போது, செல்வமுருகன் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.

இந்நிலையில் பண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதத்தின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை பிரிவுக்கு, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story