மருத்துவ படிப்புகளில் சேர 12-ந் தேதி கடைசி நாள்
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 28 ஆயிரத்து 801 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.
அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 28 ஆயிரத்து 801 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.
அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19 ஆயிரத்து 157 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 644 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 492 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3 ஆயிரத்து 804 பேரும் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு வருகிற 12-ந் தேதி கடைசிநாள் ஆகும். அதன் தொடர்ச்சியாக வருகிற 16-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் நாளை(திங்கட்கிழமை) வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story