பள்ளிகளை 16-ந்தேதி முதல் திறக்கலாமா? இன்று கருத்துக்கேட்பு


பள்ளிகளை 16-ந்தேதி முதல் திறக்கலாமா?  இன்று கருத்துக்கேட்பு
x
தினத்தந்தி 9 Nov 2020 7:43 AM IST (Updated: 9 Nov 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 9-ந்தேதி (இன்று) நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் இன்று கருத்துகள் கேட்கப்பட இருக்கின்றன. அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்துள்ளது.

பெற்றோரிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்தக்கட்ட முடிவை எடுக்க உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இந்த கருத்துகள் கேட்கப்பட உள்ளன. சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கு நேரடியாக வர முடியாத பெற்றோர் தங்களுடைய கருத்துகளை கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் என்று அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story