தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது: கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மு.க. ஸ்டாலின்


தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது: கமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 Nov 2020 1:57 PM IST (Updated: 9 Nov 2020 1:57 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை,

அமெரிக்க தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலாஹாரிஸ் ஆகியோருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

துணை ஜனாதிபதி பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் நின்ற கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த பெருமையை பெறும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கும் அம்சம் ஆகும்.

உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த, குறிப்பாக உலக மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும் கொரோனாவையே மறக்கடிக்கச் செய்த அமெரிக்க தேர்தல் தற்போதுமுடிவடைந்திருக்கிறது.

இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. குறிப்பாக உள்நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், அமெரிக்க நாட்டின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸுக்கு  வாழ்த்துத் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், தன் கைப்படத் தமிழில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டின் மன்னார்குடி - துளசேந்திரபுரத்தை தாய்வழிப் பூர்வீகமாகக் கொண்டவர்!

கமலா ஹாரிஸின் தமிழகத் தொடர்பினை நினைவூட்டும் வகையில் நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

"அன்புமிக்க கமலா ஹாரிஸ்,

அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் உங்களுக்கு வணக்கம்; வாழ்த்துகள்!

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள் பேதம் இல்லை என்பதைப் போலவே, ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களைத் தீட்டிய இயக்கம். அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

ஒரு தமிழ்ப் பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

உங்களது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும்.

தங்களது வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்!".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story