வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரம்: போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகன் மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 39). கடந்த 30-ந்தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருகனை கைது செய்தனர்.
பின்னர் நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வமுருகன், விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இரவு உடல்நலம் பாதிக்கப்பட்ட, செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி போலீசார் அடித்து துன்புறுத்தியதில் தான் செல்வமுருகன் உயிரிழந்துள்ளார். எனவே இறப்புக்கு காரணமான போலீசாரை கைது செய்தால் தான், உடலை வாங்குவோம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக செல்வமுருகனின் உடலை பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் முன்வரவில்லை.
இதற்கிடையே விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் தான், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிறைக்காவலர்கள் அழைத்து சென்றனர். அங்கு செல்வ முருகன் சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்வமுருகனின் உடலை, நேற்று முன்தினம் விருத்தாசலம் மாஜிஸ்திரேட்டு ஆனந்த் பார்வையிட்டு, போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். அதை தொடர்ந்து, அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாஜிஸ்திரேட்டு ஆனந்த், விருத்தாசலம் கிளை சிறைக்கு நேரில் சென்று, நடந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில், சந்தேக மரணம் என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார், செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகன் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story