பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத மிதவை கிரேன் மோதி விபத்து
பாம்பன் ரயில் பாலத்தில் ராட்சத மிதவை கிரேன் மோதி விபத்துக்குள்ளானது.
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் பாலத்தில் ராட்சத கிரேனுடன் கூடிய மிதவை இரவில் மோதியதால், பாலம் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் பாலத்தை கடக்க பயணிகளுடன் வந்த சேது எக்ஸ்பிரஸ் அதிரடியாக ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியிலேயே நிறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 100 ஆண்டுகளை கடந்த இந்த ரெயில் பாலம் பழமையாகி விட்டதால் அதன் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.250 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளுக்காக பாம்பன் ரெயில் பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இரும்பு மிதவைகள் கடலில் நிறுத்தப்பட்டு, அதன் மீது கடலில் தூண்கள் அமைக்க பயன்படும் அதிநவீன எந்திரம், உபகரணங்கள் கொண்டு செல்ல வசதியாக கிரேன்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாம்பன் பகுதியில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசி வந்ததுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடலில் நிறுத்தி இருந்த மிதவைகள் தள்ளாடிக்கொண்டிருந்தன. நேற்று இரவு 9 மணி அளவில் தூக்குப்பாலத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த ராட்சத கிரேனுடன் கூடிய ராட்சத இரும்பு மிதவை, பாம்பன் ரெயில் பாலத்தின் மீது பயங்கரமாக மோதியபடி நின்றது. அதை மீட்கும் பணியில் ரெயில்வே பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ஏராளமான பயணிகளுடன் பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக வந்து கொண்டிருந்தது. பாலத்தின் மீது கிரேன் மோதிய சம்பவத்தை தொடர்ந்து சேது எக்ஸ்பிரஸ் ரெயிலானது பாலத்தின் நுழைவு பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கிரேன் மோதியதில் பாலத்தின் தூண்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என தெரியவருகிறது.
பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பின்னர்தான் ரெயிலை இயக்குவதற்கு அனுமதி தரப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story