தமிழகத்தில் 12, 13-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 12, 13-ந் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Nov 2020 3:00 AM IST (Updated: 10 Nov 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக நாளை (புதன்கிழமை) இரவில் இருந்து கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 (வியாழக்கிழமை), 13-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் இந்த 2 நாட்களும் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன்பின்னர், தீபாவளி தினத்தன்றும் (சனிக்கிழமை) சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தை (இன்று) பொறுத்தவரையில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

எதிர்பார்த்தபடி மழை பதிவாகி வந்தாலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் நமக்கு இதுவரை கிடைத்த இயல்பான மழை அளவைவிட குறைவாகவே மழை பதிவாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story