தமிழகம் முழுவதும் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறப்பு
தமிழகம் முழுவதும் அருங் காட்சியகங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நவம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்கம் திறப்பு, அருங்காட்சியகங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் இந்த ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்களை 10-ந் தேதி (இன்று) முதல் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அருங்காட்சியகங்கள் திறப்பு தொடர்பான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அருங்காட்சியகங்கள் துறையின் 21 மாவட்ட அருங்காட்சியகங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் ஆகியவை திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.
ஆன்லைன் வசதி
அதன்படி, பள்ளி மாணவர்கள் உள்பட அதிக அளவிலானவர்கள் அருங்காட்சியகங்களை பார்வையிட வரும்போது, சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள் நுழைவுக்கான அனுமதி சீட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதிகள் போன்றவை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட வேண்டும்.
தனியான பார்வையாளர்களுக்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை. அனுமதி சீட்டுகள் அலுவலர்கள் மூலம் பெறப்படாமல், கியூஆர் கோடு, ஸ்கேனிங் மற்றும் செல்போன் மூலமாக அனுமதி சீட்டு முறை செயல்படுத்தப்பட வேண்டும். தினமும் எத்தனை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்காக அருங் காட்சியக பார்வை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
முக கவசம் கட்டாயம்
மாவட்ட அருங்காட்சியகங்களில் அதிக அளவிலான பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஆன்லைன் முறை பின்பற்றப்பட வேண்டும். பார்வையாளர்கள் கைகள் சுத்திகரிப்புக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும். முக கவசம் அணியாத பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.
தேவையான இடங்களில் சுத்திகரிப்பு திரவம் மற்றும் கைகழுவுவதற்கான தண்ணீர், சோப்பு உள்ளிட்ட வசதிகள் வைக்கப்பட வேண்டும். தேவையான உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டு, பணியாளர்கள், பார்வையாளர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியுடன் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்ட காத்திருப்பு அறைகள், குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முக கவசம், முக மறைப்பான்கள் அணிந்திருப்பவர்கள், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. சிலைகள், காட்சி பொருட்களை தொடக்கூடாது. உடல் நிலை பாதிக்கப்பட்டவர் இருந்தால் அவரை தனிமைப்படுத்தி, மருத்து வரால் பரிசோதிக்க வேண்டும். பார்வையாளர்கள் உள்ளே செல்லவும், வெளியில் வரவும் தனித்தனியான வாசல்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள், பணியாளர்கள் இடையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story