தீபாவளி பண்டிகை; கொரோனா அச்சமின்றி சென்னையில் கடைகளுக்கு படையெடுத்த மக்கள்


தீபாவளி பண்டிகை; கொரோனா அச்சமின்றி சென்னையில் கடைகளுக்கு படையெடுத்த மக்கள்
x
தினத்தந்தி 10 Nov 2020 8:52 PM IST (Updated: 10 Nov 2020 8:52 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொரோனா அச்சுறுத்தலை புறந்தள்ளி சென்னை தி.நகரில் உள்ள கடைகளுக்கு மக்கள் திரளாக சென்று வருகின்றனர்.

சென்னை,

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியத்திற்கு அடுத்து தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதனை முன்னிட்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகையை தொடர்ந்து நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  எனினும், பண்டிகை கால ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என கேரள அரசு கூறியுள்ளது.

ஆனால், கேரளாவை எடுத்துக்காட்டாக கொண்டு, வருகிற பண்டிகை நாட்களில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் கேட்டு கொண்டார்.

இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களிலும் அரசின் அறிவிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு மக்கள் தங்கள் வேலைகளில் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில், தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் சென்னையில் இன்று 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா வைரசின் அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ளாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்னை தி.நகரில் உள்ள கடைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் படையெடுத்து உள்ளனர்.  திரளாக கூடியுள்ள அவர்களில் சிலர் முக கவசங்களை அணியாமல் உள்ளனர்.  இதனால் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என கூறப்படுகிறது.

Next Story