டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் - அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது.
மதுரை,
வரும் நவ.16ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில் மாணவர்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, நவ. 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது இன்று நடந்த விசாரணியின் போது, பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனாவின் 2-ம் அலை பரவி வருகிறது. நீதிபதிகள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவர்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக ஏற்படும்.
இதனால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. இது தொடர்பாக அரசு சிறந்த முடிவெடுக்கும். பள்ளிக், கல்லூரிகளை திறப்பதில் பிற மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணை நவம்பர் .20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story