பள்ளி-கல்லூரிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்


பள்ளி-கல்லூரிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2020 7:46 AM IST (Updated: 12 Nov 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி-கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான பெற்றோர் கருத்து என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

பள்ளி-கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான பெற்றோர் கருத்து என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு திறக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராம்பிரசாத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வரை எந்த வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே தமிழகம் முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக விடுதிகள் திறக்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், புறநகர் ரெயில்கள் இயங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பல பகுதிகளில் கொரோனா வைரஸ் 2-ம் கட்டமாக அதிக அளவில் பரவி வருகிறது. தற்போது மழையும் பெய்கிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்தால் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இதனால் மாணவ-மாணவிகளிடம் இருந்து பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சில பள்ளி, கல்லூரிகளில் மருத்துவ வார்டுகள் அமைத்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறக்கலாம். அண்டை மாநிலங்களில் என்ன நிலை உள்ளது? என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு செய்வது அவசியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, “பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story