மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் 395 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் 395 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2020 3:21 AM IST (Updated: 13 Nov 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் 395 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேவை மிக முக்கியமாக திகழ்ந்து வருகிறது. இந்த சேவையை வலுப்படுத்தும் விதமாக ரூ.103 கோடி செலவில் கூடுதலாக 500 புதிய ஆம்புலன்ஸ் வாங்க அரசாணை வெளியிடப்பட்டு, அந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 958 ஆம்புலன்சுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 723 கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 984 பிற நோயாளிகளும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். சென்னையில் தகவல் பெறப்பட்ட 8.03 நிமிடத்தில் இலக்கை 108 ஆம்புலன்சுகள் சென்றடைகின்றன. சர்வதேச அளவில் அவசரகால வாகனங்கள் இலக்கை சென்றடையும் நேரம் 8 நிமிடமாக உள்ளது. கால் டாக்சி சேவை போல ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்தை செல்போனில் தெரிந்து கொள்ள தேவையான தொழில்நுட்ப வசதிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 3-ந் தேதி மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 61 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. பண்டிகை நாளாக இருந்தாலும் திட்டமிட்டபடி இறுதி தரவரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படவில்லை. முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, மைதானம் போன்ற பெரிய இடங்களில் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கலந்தாய்வில் மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆள்மாறாட்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் நாள் ஒன்றுக்கு 500 மாணவர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள் இடஒதுக்கீடு மூலமாக இந்த ஆண்டு ஏறத்தாழ எம்.பி.பி.எஸ். படிப்பில் 304 மாணவர்கள், பி.டி.எஸ். படிப்பில் 91 மாணவர்கள் என மொத்தம் ஏறத்தாழ 395 ஏழை அரசு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story