ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 2021-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த முஸ்லிம்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், தகுதிக்கான அளவுகோல்கள், வயது கட்டுப்பாடுகள், உடல்நலம் மற்றும் உடற்தகுதி தேவைகள் ஆகியவற்றுடன் ஹஜ் 2021 சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் நடைபெறும்.
ஹஜ் 2021-க்கான ஹஜ் விண்ணப்பத்தின் முழு செயல்முறையும் சவுதி அரேபிய அரசின் இறுதி வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2021-க்காக விண்ணப்பிக்கும் செயல்முறை 7.11.2020 முதல் ஆன்லைனில் தொடங்கி 10.12.2020 அன்று முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் வழியாகவும் அல்லது பிளே ஸ்டோரில் இந்திய ஹஜ் குழு செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு உறையில் அதிக பட்சம் 3 நபர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டின் ஹஜ் புனித பயணிகளை பொறுத்தவரையில் கொச்சின் புறப்பாட்டு தளமாக இருக்கும். கொரோனா தொற்று நோய் காரணமாக அயல்நாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஹஜ் மேற்கொள்ள எந்த ஏற்பாடும் செய்யப்படமாட்டாது. ஹஜ் முன்பணத்தொகை ரூ.1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஹஜ் கட்டணங்கள் சுமார் ரூ.3,70,000 முதல் ரூ.5,25,000 வரை அதிகரிக்க நேரிடும்.
ஹஜ் 2021 பற்றிய விவரங்களுக்கு, இந்திய ஹஜ் குழுவின் ஹஜ் தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்: 02222107070 (100 தொடர்பு எண்கள்).
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story