ஒரு பைசா கூட லஞ்சமாக நான் பெற்றது இல்லை: விசாரணையை சந்திக்க தயார் - சூரப்பா பேட்டி
தமிழக அரசின் விசாரணை பற்றி எனக்கு கவலை இல்லை. எதையும் சந்திக்க தயார் என்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை,
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தனி நபர் குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். துணைவேந்தர் சூரப்பா மீதான பல்வேறு புகார்கள் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான தனிநபர் குழு விசாரிக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அரசின் முடிவுக்கு எதிராக செயல்படுவது, அரியர் விவகாரம்,சிறப்பு அந்தஸ்த்து விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகமே நிதி திரட்டும் என்று மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது உள்ளிட்ட பல விவகாரங்களில் உள்நோக்கத்துடன் சூரப்பா செயல்பட்டு வந்ததாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, இந்த தனி நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு பைசா கூட லஞ்சமாக நான் பெற்றது இல்லை. எந்த விதிகளையும் மீறவில்லை. முகவரி இல்லாமல் நிறைய கடிதங்கள் வருகின்றன. விசாரணை குழு அதன் வேலையை செய்யட்டும். எந்த விசாரணையையும் சந்திக்க தயார். ஐஐடியில் பணியாற்றி வந்த எனது மகளை இங்கு பணியாற்றியது நன்மைக்கே. எனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்கு தேவை என்பதற்காகவே கவுரவ பதவி வழங்கப்பட்டது. நான் யாரையும் சந்திக்கப்போவதில்லை. நான் எப்படிப்பட்டவன் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். எனது மகள் சம்பளம் பெறாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேவையாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story