6 மாவட்டங்களில் ரூ.1,347 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
நெல்லை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.1,347 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னை,
கரூர், ஈரோடு, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் ரூ.1,347.05 கோடி மதிப்பில் 7 கூட்டு குடிநீர் திட்டங்களை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
தமிழகத்தின் நீர் மேலாண்மை திட்டங்களை பாராட்டும் வகையில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவிலேயே நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற முதல் விருதினை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. ஊரக பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் கரூர், ஈரோடு, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளில் 8.24 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,347.05 கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க 7 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அரசின் நிர்வாக அனுமதி பெற்று செயல்படுத்தப்படவுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி , திருப்பத்தூர் மற்றும் நாட்றாம்பள்ளி ஒன்றியங்களில் உள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.182.09 கோடி மதிப்பில் பராமரிப்பில் இருக்கும் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் தொழிற்சாலை தேவை பங்கீட்டில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை குடியிருப்பு கணக்கின்படி 67 குடியிருப்புகள் கண்டறியப்பட்டு ஒரு புதிய கூட்டு குடிநீர் திட்டம், கொள்ளிடம் ஆற்றினை ஆதாரமாக ரூ.117.09 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊரக குடியிருப்புகள், நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊரக குடியிருப்புகள் மற்றும் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட களியங்குளம் குடியிருப்புகளுக்கு ரூ.50.50 கோடி மதிப்பில் குடிநீர் வழங்க கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ரூ.440.63 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 8 ஊராட்சிகளுக்கு உப்பட்ட குடியிருப்புகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.56.94 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் 5 கூட்டு குடிநீர் திட்டங்களை மறு கூட்டமைப்பு செய்து குடிநீர் வழங்கவும் மற்றும் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைத்து குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story