சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை இன்று தொடங்குகிறது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் (2020-2021) மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுவார்.
இதனை தொடர்ந்து நாளை(திங்கட்கிழமை) கார்த்திகை 1 முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடைபெறும்.
பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தினசரி 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் என நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழும், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் மலை ஏறவேண்டும். மருத்துவ சான்றிதழ் இல்லாத பக்தர்கள் கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Related Tags :
Next Story