‘தமிழ் மொழியை பிரிப்பது எங்கள் அதிகாரத்தை பறிப்பது’ கவிஞர் வைரமுத்து ஆதங்கம்
தமிழ் மொழியை பிரிப்பது எங்கள் அதிகாரத்தை பறிப்பது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
“விதியே விதியே என்செய நினைத்தாய் தமிழச் சாதியை” என்ற பாரதி வரியை பாடிப்பாடி நெஞ்சுடைந்து நிற்கிறேன். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்றும், அதிலும் வாரத்தில் மூன்றே வகுப்புகள் என்றும், தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள் என்றும் மத்திய அரசு விதிகள் வகுத்திருப்பதை பார்த்துத்தான் ‘விதியே விதியே’ என்ற பாரதி பாடல் எனக்குள் வினைப்பட்டது. நாமிருப்பது உள்நாட்டிலா உகாண்டாவிலா என்ற வெட்கம் எங்கள் தலைமுடியை இழுத்து தலையை தின்கிறது.
இந்திய பிரதமர் உலகமெல்லாம் தமிழ் வரிகளை உச்சரிக்கிறார்; மகிழ்ச்சி; நன்றி. ஆனால், மேற்கோள்களால் மட்டுமே தமிழர்கள் மெய்சிலிரிக்க மாட்டார்கள்; செயல் வேண்டும். இந்தியாவின் தேசிய இனங்களின் எல்லா தாய்மொழிகளையும் உயர்த்தி பிடிக்கும் உரிமை வேண்டும்.
மொழி விஞ்ஞானிகள் எச்சரிக்கை
தாய்மொழியை ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால் யோசித்தால் அது அடையாளம் மட்டுமன்று அதிகாரம் என்பது புலனாகும். தமிழ்மொழியை எங்களை விட்டு பிரிப்பது அதிகாரத்தை மெல்ல மெல்ல பறிப்பது என்றே புத்திமான்களால் புரிந்துகொள்ளப்படும்.
உலகின் சரிபாதி மொழிகள் இந்த நூற்றாண்டில் இறந்துவிடும் என்ற மொழி விஞ்ஞானிகளின் எச்சரிக்கையில் இருந்து நாங்கள் விழிப்பதற்குள்ளே இப்படி எங்கள் விழிகளைப் பிடுங்கினால் எப்படி? இதை ஓர் எளிய செயலாக எடுத்துக்கொள்ள இயலாது.
அறமாக கடைப்பிடிக்க வேண்டும்
தமிழில் நம்பிக்கை இல்லாத, தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத, ஏன் தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பதுகண்டு பனிக்காற்றின் தளிரைப்போல் எங்கள் இதயம் நடுங்குகிறது. தமிழுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவருவது தமிழர்கள் எதிர்த்த பிறகு அதை மாற்றிக்கொள்வது என்ற நடைமுறை நல்லதல்ல. போராடும் பாம்பை கொத்தவிட்டு கொத்தவிட்டு அது களைத்துப்போன பிறகு அதன் கழுத்தை கவ்வும் கீரியைப்போல, தமிழர்களை களைக்க வைக்கும் முயற்சிகளுள் இதுவும் ஒன்றோ என்று எண்ண தோன்றுகிறது.
தமிழ் படிப்போரின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக போவதற்கு பெற்றோரும் ஒரு பெருங்காரணம் என்று கவலையுறுகிறோம். தமிழ்நாட்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஓர் அறமாகவே கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழை காப்போம்
ஒரு தலையாய செய்தி சொல்கிறேன். “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறி தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியை தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் 3 மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் - சீனம் - ஜப்பான். இந்த 3 இனங்களுமே தொழில்நுட்பத்துக்கு தங்கள் மொழியை கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்த தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”.
கேந்திரிய வித்யாலயா பள்ளி குறித்து சிந்திக்கும் இதே வேளையில் ‘தாய்மொழியும் தமிழ்நாடும்’ என்பது குறித்து ஒட்டுமொத்த அறிவுலகமும் கல்வி உலகமும் ஓர் உறுதி சிந்தனை மேற்கொள்ளவேண்டும். மத்திய அரசின், மாநில அரசின் தடைகளைவிடத் தமிழர்கள் தங்களின் மனத்தடையை உடைத்தெறிய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் பிள்ளைகள் தமிழ் படிப்பார்கள். தமிழை பாடமாய் அல்ல பயிற்றுமொழியாய் படிப்பவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது எழுதிய சட்டமாகவும் எழுதாத சட்டமாகவும் திகழ வேண்டும். இல்லையெனில் 50 ஆண்டுகளில் தமிழ் பேச்சு மொழியாகச் சுருங்கிப்போகும் விபத்து நேர்ந்தாலும் நேரும்; 3 ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் சேர்த்துவைத்த ஞானச் செல்வங்கள் புதைத்த இடம் தெரியாத புதையலாய் மறைந்தொழியும்.
தமிழுக்கு எங்கே ஊறு நேர்ந்தாலும் அரசியல்-சாதி-மொழி-மதம் கடந்து தமிழ்நாட்டுக்குள் வாழும் எல்லா இனங்களும் ஒற்றைக் குரலாய் ஒலிக்க வேண்டும். ‘தமிழைக் காப்போம்; தமிழரை மீட்போம்’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story