விருத்தாசலம் கிளை சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம்- பொய் வழக்கு என வேல்முருகன் குற்றச்சாட்டு
விருத்தாசலம் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்த முந்திரி வியாபாரியான செல்வ முருகனை ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். மேலும் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்ததற்கான ஆதார வீடியோ வெளியிட்டுள்ளேன். செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது. செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வந்தவர்.
செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்கள் வெளியிட்டுள்ளேன். முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்த செல்வமுருகன் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். செல்வமுருகனை போலீசார் தாக்கியதற்கு நேரடி சாட்சிகள் இருக்கின்றனர்.
அக்டோபர் 29-ந்தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதார வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. வளர்ந்து வந்த தொழில் அதிபர் ஒருவரை வழிப்பறி திருடனாக சித்தரித்துள்ளனர். புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்தது மட்டும் போதாது. விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே வேல்முருகன் வெளியிட்டுள்ள ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story